'எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில் அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை.' (அல் குர்ஆன் : 13:11)
தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தில் கல்விக்கு உதவக்கூடிய நல்ல உள்ளங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இது முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ள மார்க்கப் பிடிப்பையும் சமூகப் பற்றையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
ஒரு காலத்தில் ஒரு சில அறக்கட்டளைகள் மட்டுமே இந்த அறப்பணியைச் செய்து வந்தன ஆனால் இன்று தனிப்பட்ட முறையிலும் கூட தங்களால் இயன்ற அளவு படிக்கின்ற மாணவர்களின் நிலையை அறிந்து மனமுவந்து பலர் உதவி வருகின்றனர். இதன்மூலம் படித்து பட்டம் பெறும் முஸ்லிம் மாணவ மாணவியரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் பெறுகி வருகிறது என்பதில் மாற்றமில்லை.
'கல்வி கற்றவராக இருங்கள்; கற்றுக் கொடுப்பவராக இருங்கள் கற்பவர்களுக்கும் கற்றுக கொடுப்பவர்களுக்கும் உதவி செய்பவராக இருங்கள் என்று பெருமானார் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காட்டிய வழியில் வசதி வாய்ப்பைப் பெற்றவர்கள் செய்கின்ற இந்த அர்ப்பணிப்பு நிச்சயமாக சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது என்பதில் ஐயமில்லை.
இந்த அறப்பணியை மேலும் ஊக்கப்படுத்திடவும் உதவி செய்திடும் நல்ல உள்ளங்களின் எண்ணிக்கையை அதிகரித்திடவும் யாரெல்லாம் கல்வி நிதியுதவி அளித்து முஸ்லிம் சமுதாயத்தின் வறுமையை ஒழித்திட சேவை செய்து வருகின்றனரோ அந்த முஃமீன்களோடு சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.
பொதுவாக கல்வி நிதியுதவி கோரி வரும் விண்ணப்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஓரளவிற்கு தங்கள் குழந்தைகளின் கல்விச் செலவை தாங்களே பூர்த்தி செய்திட முடியும் என்ற நிலையில் உள்ளவர்களும் கூட உதவி கோரி அறக்கட்டளைகளுக்கு விண்ணப்பிப்பது சற்று கவலை அளிக்கிறது.
மேலும் அனைத்து நிறுவனங்களுக்கும் விண்ணப்பித்து அதன்மூலம் கிடைக்கின்றவரை லாபம் என்ற எண்ணம் உடையவர்களும் அதிகரித்து வருகின்றனர்.
எங்கே முஸ்லிம் சமூகத்தின் ஒரு சிலர் தங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் மறந்து வசதியுடையவர்களின் அர்ப்பணிப்பு எண்ணத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
முஸ்லிம்கள் சிலரின் அறியாமையால் பெருகி வரும் இதுபோன்ற சிறிய சிறிய இடையூறுகளைத் தவிர்த்து இந்தக் கல்விச சேவை வெற்றியடைந்திடவும் அதன் மூலம் முஸ்லிம் சமூகம் முழுமையான பலனைப் பெறவும் கல்வி உதவி செய்யக்கூடியவர்கள் தயவு கூர்ந்து கீழ்வரும் வழிமுறைகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு அறப்பணிகளை மேலும் மேலும் தொடர்ந்திடவேண்டுகிறோம்.
1. அறக்கட்டளைகள் மற்றும் தனவந்தர்கள் தாங்கள் அளிக்கின்ற கல்வி நிதியுதவி மூலம் பயன்பெறும் மாணவ, மாணவியர்களும் பிற்காலத்தில் இந்தச் சமூகப் பணியில் இணைத்துக்கொள்ளக்கூடிய அளவிற்கான வழிகாட்டுதல் மிகவும் அவசியம். அப்போதுதான் உதவியவர்களின் நோக்கமும் சமுதாயத்தின் தேவையும் தொடர்ந்து பூர்த்தியாகும்.
2. இன்றைய இந்தியச் சமூகத்தில் முஸ்லிம் சமுதாயம் பெரிதும் சிக்கலைச் சந்திக்கும் துறைகளுக்கான படிப்புகளைத் தேர்வு செய்யும் மாணவ, மாணவியர்கே நிதியுதவியில் முன்னுரிமை கொடுப்பது நல்லது. இது சமூகத்தின் பாதுகாப்பு நிலையை பெரிதும் உயர்த்தும். அந்த வகையில் அரசுப் பணியை நோக்கிய கல்விப் பயணத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம். அதிலும் குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ், உளவுத்துறை, காவல்துறை மற்றும் இதழியல்(ஜர்னலிசம்), சட்டம் ஆகிய துறை சார்ந்த படிப்புகளைப் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி உதவி செய்திட வேண்டும். இவற்றிற்கு முழு முன்னுரிமை கொடுப்பது அடுத்த தலைமுறையின் சமூகப் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும்.
3. உதவி செய்துவரும் பெருமக்கள் மிகக் குறிப்பாகச் செய்ய வேண்டியது ஒரு மாணவனின் அல்லது மாணவியின் கல்வித் தொகை முழுவதற்கும் பொறுப்பேற்று படிப்பு முழுமை பெறும் வரை நிதியுதவி செலுத்திட வேண்டுகிறோம். இருக்கின்ற பணத்தை குறுகிய தொகையாகப் பிரித்துப் பெறுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் தேவை முழுமையாக பூரத்தியாகாமல் இன்னும் யாரெல்லாம் உதவி செய்திகிறார்கள் அவர்களிடமும் பெற வேண்டும் என்கிற மோசமான பழக்கத்தை சமுதாயத்தில் ஏற்படுத்திவிடும், ஏற்படுத்தி வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.
4. பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளும் மாணவ, மாணவியற்க்குத்தான உதவிகள் அதிகம் தேவைப்படுகிறது. இயற்பியலில், வேதியியலில், கணிதத்தில், வேளாண்மையில், மருத்துவம், விண்வெளி போன்ற படிப்புகளில் ஆய்வுகள் மேற்கொள்பவர்களுக்கு ஆய்வுகள் முடிவுபெறும் வரை உதவிட வேண்டுகிறோம். அத்தகைய ஆய்வுகள் மனிதகுலத்திற்கும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பல அரிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வரும். பல புதிய விஞ்ஞானிகள் கிடைப்பதற்கு வழிவகுக்கும்.
5. இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் கல்வியின் அவசியத்தையும் ஆர்வத்தையும் எடுத்துச் சொல்லும் பிரச்சாரத்திற்கு (propogation)நிதியுதவி தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும். துண்டுப்பிரசுரங்கள், கருத்தரங்கஙகள், பொதுக்கூட்டங்கள் என்று கல்விப் பணிகள் முஸ்லிம் சமூகத்தில் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
ஆக சமுதாயத்தின் தேவையை பூர்த்தி செய்யும் துறைகளுக்கு முழு முன்னுரிமை கொடுப்பது படிக்கின்ற காலம் முழுமைக்கும் கொடுப்பது; ஆய்வுகளை ஊக்கப்படுத்துவது; தொடர் பிரச்சாரம் செய்வது. இதன்படி நமது அறப்பணிகளை அமைத்துக் கொண்டு கைகோர்த்துச் செயல்படுவோம் என்றால இன்ஷா அல்லாஹ் ஒரு மாபெரும் சமூகப்புரட்சி நமது சமூகத்தில் நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை. அவை முஸ்லிம் சமூகத்தை முன்னேறிய சமூகமாக வெகு விரைவில் மாற்றிவிடும் இன்ஷா அல்லாஹ்.
ஆக்கம் நன்றி: CMN சலீம்
கல்விதொடர்பான ஆலோசனைகளுக்கு :தொலைபேசி எண் 91 9382155780.
VERY THANKS TO
ADIRAIXPRESS
PENAAMUNAI
No comments:
Post a Comment