Showing posts with label மார்வாடி. Show all posts
Showing posts with label மார்வாடி. Show all posts

Sunday, December 5, 2010

வட்டிக்கு பணம் கொடுக்கக் கூடாது என ஜெயின், மார்வாடி சமூகத்தை நாங்கள் கேட்டுக் கொள்ளலாமா?

இறைச்சி கடைகளை எட்டு நாட்களுக்கு மூட வேண்டும் என ஜெயின் அமைப்பு அளித்த கோரிக்கையை, தமிழக அரசு நிராகரித்துள்ளது. இதையடுத்து, சென்னை மட்டன் வியாபாரிகள் சங்கத்தின் மனுவை, ஐகோர்ட் பைசல் செய்தது.

சென்னை மட்டன் வியாபாரிகள் (சில்லறை) சங்கம் தாக்கல் செய்த மனு: எங்கள் சங்கத்தில் உள்ள பெரும்பாலோர், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பல ஆண்டுகளாக இறைச்சி விற்பனையில் உள்ளனர். மகாவீர் நிர்வாண் தினத்தை ஒட்டி, இறைச்சிக் கூடம், இறைச்சி விற்பனை கடைகளை மூட வேண்டும் என ஜெயின் அமைப்பு, அரசிடம் கோரியது. அதன்படி, ஜனவரி 23ம் தேதி கடைகளை மூட வேண்டும் என, அரசு உத்தரவிட்டது. ஆண்டுதோறும் இதை பின்பற்றி வருகிறோம். சிறுபான்மை சமூகத்தினர், குறிப்பாக முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளை கருத்தில் கொள்ளாமல், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருந்தாலும், அதை பெருந்தன்மையுடன் நாங்கள் ஏற்றுக் கொண்டோம். தற்போது, "பரியுஷன் பர்வா' என்ற நிகழ்ச்சியை ஒட்டி, எட்டு நாட்கள் இறைச்சி கடைகளை மூட வேண்டும் எனக் கோரி, ஐகோர்ட்டில் தமிழ்நாடு ஜெயின் மகாமண்டல்  அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது. ஜெயின் அமைப்பு அளித்த மனு மீது முடிவெடுக்க  ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சைவ உணவில் நம்பிக்கை கொண்டவர்களாக ஜெயின் அமைப்பு இருக்கலாம். அதற்காக, அசைவ உணவு சாப்பிடுபவர்களிடம், தங்கள் கொள்கையை திணிக்கக் கூடாது. இறைச்சி விற்பனை செய்வது எங்கள் அடிப்படை உரிமை. எங்கள் மதத்தில், வட்டிக்கு பணம் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, ரம்ஜான் மாதத்தில், வட்டிக்கு பணம் கொடுக்கக் கூடாது என ஜெயின், மார்வாடி சமூகத்தை நாங்கள் கேட்டுக் கொள்ளலாமா? அவர்களது பிரதான வர்த்தகமே அடகு கடை, வட்டிக்கு பணம் கொடுப்பது தான். நாங்கள் அவ்வாறு ஒரு கோரிக்கையை முன்வைத்தால், அந்த சமூகத்தினர் ஆட்சேபம் தெரிவிப்பர். எனவே, எட்டு நாட்கள் இறைச்சி கடையை மூட வேண்டும் என கோருவது நியாயமற்றது. எங்கள் சங்கம் சார்பிலும் மனு அளித்துள்ளோம். அதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஜி.வாசுதேவன், சுமியுல்லா, அரசு சார்பில் அரசு வக்கீல் அசன் பைசல், மாநகராட்சி சார்பில் வக்கீல் முகமது கவுஸ் ஆஜராகினர்.

"டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:  ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தி, மகாவீர் நிர்வாண் தினத்தை ஒட்டி, இறைச்சி கடைகளை மூட வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், "பரியுஷன் பர்வா' நிகழ்ச்சியை ஒட்டி, எட்டு நாட்கள் இறைச்சி கடைகளை மூட வேண்டும் என கோரியதை ஏற்க முடியாது என்றும், இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு வக்கீல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஜெயின் மகாமண்டல் அமைப்பின் மனு மீது அரசு முடிவெடுத்துள்ளதால், மேற்கொண்டு உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை என கருதுகிறோம். இந்த ரிட் மனு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.