Sunday, August 28, 2011

ரயில் பாதை அமைவது எப்போது?

நாளாந்தம் எத்தனையோ செய்திகள் நம் கவனத்தில் வந்து சென்றாலும், சிலர் மட்டுமே அவற்றை அவதானித்து அதனை சம்பந்தப்பட்டவர்களுடன் பகிர்ந்து கொண்டு, அதுகுறித்த கருத்துருவாக்கத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

அவ்வகையில் 'சேஸ்காம்' அப்துல் ரஜ்ஜாக் காக்கா மற்றும் ஜாஃபர் காக்கா போன்றோர் நமதூருக்கு எவ்வகையிலேனும் ரயில் வழித்தடம் மீண்டும் செயல்பட வேண்டும் என்பதில் மிகக்கவனமாக இருந்து வருகிறார்கள்.

சென்னை-காரைக்குடிக்கு மாற்றாக பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் ரயில் வழித்தடமும் நெருநாளைய கனவாக இருந்துவரும் நிலையில்,அதுகுறித்த நாளிதல் செய்தியை அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுப்பித் தந்துள்ளார்கள்.

இதுபோன்ற ஊடகச் செய்திகளை தேடும்போது எளிதில் கிடைப்பதற்காக நமது தளத்தில் ஆவணப் படுத்தி வருகிறோம். ஆகவே, அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்கள் இத்தகைய செய்திகளை அறியத்தந்தால் நன்றியுடன் மீள்பதிவு செய்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாய்ப்புள்ளவர்கள் சம்பந்தப்பட்ட செய்தியின் கருத்துக்கள் பகுதியில் தமது கருத்துக்களைப் பதிந்து வைப்பது எதிர்காலத்தில் இது குறித்த கருத்துருவாக்கத்திற்கு உதவியாக இருக்கும்.
===========================
ஒரத்தநாடு: தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை இடையே புதிய ரயில் பாதை அமைக்க நில அளவை மேற்கொண்டு 30 ஆண்டுகளாகியும் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை.

ஒரத்தநாடு,பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாற்றுத் திறனாளி மறுவாழ்வு அலுவலகம் போன்றவற்றுக்காகவும், கல்வி, மருத்துவத் தேவைக்காகவும் நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் தஞ்சைக்கு சென்று வருகின்றனர்.

பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சைக்கு செல்லும் பொதுமக்கள், வயதானவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்து நெரிசலில் நாள்தோறும் பயணிக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பலர் தொடர்ந்து செல்லும் நிலை உள்ளது. எனவே, தஞ்சை- பட்டுக்கோட்டை இடையே ரயில் பாதை அமைக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், 1980-ம் ஆண்டு இதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டது. தொடர்ந்து, 1986-ல் இந்த வழித் தடத்தில் ரயில் பாதை அமைக்கத் தேவையான இடத்தைக் கையகப்படுத்த பல இடங்களில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, வரைபடங்களும் தயார் செய்யப்பட்டன. ஆனால், தொடர்ந்து ரயில் பாதை அமைப்பதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

ரயில் பாதை அமைக்க வலியுறுத்தி, இந்தப் பகுதியில் உள்ள பல ஊராட்சி மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ரயில்வே அமைச்சருக்கும் மனு அனுப்பப்பட்டது.

இதுகுறித்து ஒரத்தநாடு வட்டம், உறந்தரையன்குடிக்காடு பகுதியைச் சேர்ந்த புலவர் மாணிக்கம் கூறியதாவது:

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை வரை புதிய ரயில் பாதை அமைப்பதற்கு ஒரத்தநாடு பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதில் என்னுடைய நிலங்களும் அடங்கும்.

ரயில்வே துறை சார்பாக நிலம் அளக்கப்பட்டு, அதற்கு அடையாளமாக ஊன்றப்பட்ட கல் இன்றும் அப்படியே உள்ளது. பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் இடையே ரயில் போக்குவரத்து ஏற்பட்டால்தான் இந்தப் பகுதி மக்கள் நெரிசல் இன்றி பயணம் செய்ய இயலும். இதுதொடர்பாக கடந்த பல ஆண்டுகளாக ரயில்வே துறைக்கும், மத்திய, மாநில அமைச்சர்களுக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளேன். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றார் அவர்.

தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டால், தஞ்சாவூர்- அரியலூர் இடையே ரயில் இயக்கப்படும் பட்சத்தில் ராமேசுவரத்திலிருந்து பட்டுக்கோட்டை- தஞ்சாவூர்- அரியலூர் வழியாக குறைந்த பயண நேரத்தில் சென்னைக்கு செல்ல முடியும்.

சிறப்புமிக்க இந்தத் திட்டம் இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவே இருந்து வருகிறது. எனவே, தஞ்சை - பட்டுக்கோட்டை ரயில் பாதை அமைக்க சம்பந்தப்பட்டவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் விருப்பமாகும்.

நன்றி: தினமணி நாளிதழ்
வெ.பழனிவேல் / First Published : 27 Aug 2011 04:09:53 AM IST

தகவல்: 'சேஸ்காம்' அப்துல் ரஜ்ஜாக் காக்கா


அதிரை எக்ஸ்ப்ரஸ்

No comments:

Post a Comment