Friday, October 29, 2010

அயோத்தி தீர்ப்பு :அச்சத்தின் பிடியில் இந்திய முஸ்லிம்கள்

1992 டிசம்பர் 6 அன்று,அம்பேத்கர் நினைவு நாளைத் தேர்ந்தெடுத்து பாபர் மசூதியை இடித்து தகர்த்தார்கள் இந்துத்துவ சக்திகள்.

450 ஆண்டு கால வரலாற்றுச் சின்னத்தை, பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் அடையாளத்தை, வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்த மண்ணின் உயரிய மாண்பை, சில ஆயிரம் பேர் திரண்டு சில மணி நேரங்களில் சூறையாடினார்கள் .

அந்தப் பயங்கரவாதம் நிகழ்த்தப்பட்ட அந்த நாளில் உலக அரங்கில் இந்தியா தலை குனிந்து நின்றது.

இந்துத்துவப் பயங்கரவாதிகளால் அன்று இந்தியாவுக்கு ஏற்பட்ட அவமானம் இன்று இந்திய நீதித்துறையால் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது .

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, இந்திய முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமை கேள்விக்குறியானது.

பாபர் மசூதி இடிப்புக்குப் பின் நாடு முழுவதும் ஏற்பட்ட கலவரங்களாலும், இனப்படுகொலைகளாலும் முஸ்லிம்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியானது .

வழிபாட்டு உரிமையும் ,வாழ்வுரிமையும் கேள்விக்குறியானபோதும், அவ நம்பிக்கை அடையாமல், இந்தியாவின் மாண்பைக் காக்கும் உயரிய இடத்திலுள்ள நீதிமன்றங்கள் தமக்கு நீதி வழங்கும் என்று, 17 ஆண்டுகாலமாக முஸ்லிம்கள் நம்பிக் கொண்டிருந்தனர்.
தமது இழப்புகளையும்,வேதனைகளையும்,வலிகளையும் பொறுத்துக்கொண்டு நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருந்தனர்.

'சட்டத்தையும் மதிக்க மாட்டோம்; நீதிமன்றத்தையும் மதிக்க மாட்டோம்' என்றெல்லாம் இந்துத்துவ சக்திகள் கொக்கரித்த போதும்,சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்வோம் என்று முஸ்லிம்கள் அமைதி காத்தனர் ...

அரசியல் வாதிகளை நம்பி,காவல்துறையை நம்பி,ராணுவத்தை நம்பி,ஊடகத்தை நம்பி., என ஜனநாயகத்தின் முக்கியத் தூண்கள் அனைத்தையும் நம்பி நம்பி ஏமாந்து போன முஸ்லிம் சமூகத்தினர், நீதிமன்றம் தம்மை ஏமாற்றாது என்று பெரிதும் நம்பிக் கொண்டிருந்தனர் .

இந்நிலையில், 60 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த பாபர் மசூதி வழக்கில் ,செப்டம்பர் 30 ஆம் நாள் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பாபர் மசூதி இடத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பாகத்தை இந்து மகா சபைக்கும், மற்றொரு பாகத்தை நிர்மோகி அகாரா என்னும் இந்து அறக் கட்டளைக்கும், மூன்றாவது பகுதியை முஸ்லிம்களுக்கும் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர் .

பாபர் மசூதி இடம் யாருக்குச் சொந்தம் என்பதை சொத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் ,அனுபவப் பாத்தியதையின் அடிப்படையிலும் ஆய்வு செய்து, சட்ட ரீதியான தீர்ப்பை நீதிமன்றம் தரும் என்று நம்பிக்கொண்டிருந்த முஸ்லிம்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு, இந்துத்துவ சக்திகளின் நம்பிக்கைக்குத் தலைவணங்கி சட்டப் புறம்பான தீர்ப்பை அளித்துள்ளனர் நீதிபதிகள்.

நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வோம் என்று முஸ்லிம்கள் சொல்லிவந்தது உண்மை.
ஆனால் அந்தத் தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டுமே தவிர நீதிபதிகளின் தனிப்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையிலோ அல்லது இந்துத்துவ சக்திகளின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையிலோ அமையக் கூடாது.

ஆனால் அலகாபாத் நீதிபதிகளின் இந்தத் தீர்ப்பு முழக்க முழுக்க சட்டத்திற்குப் புறம்பான வகையிலும்,நீதிக்கு சமாதி கட்டும் வகையிலும் அமைந்துள்ளது.

பாபர் மசூதி இடம் முஸ்லிம்களுக்கு உரியதா அல்லது இந்துக்களுக்கு உரியதா என்ற கேள்விக்கு விடையைத் தேடி, பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பிலுள்ள நீதிமன்றம் ,சட்ட ரீதியான அம்சங்களை எல்லாம் புறந்தள்ளி விட்டு,தனக்குத் தேவையில்லாத விசயங்களிலெல்லாம் மூக்கை நுழைத்து, மேலும் பல பிரச்சனைக்கு வழிவகுத்துள்ளது.

ராமர் எங்கே பிறந்தார் என்பதோ,அவருக்கு யார் பிரசவம் பார்த்தார் என்பதோ,அவர் அயோத்தியில் கோயில் கட்டினாரா இல்லையா என்பதோ,பாபர் அந்தக் கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டினாரா என்பதோ அல்ல நீதிமன்றத்தின் முன்னால் இருந்த கேள்வி. பிரச்சனைக்குரிய இடம் யாருக்கு உரியது என்பதைச் சொல்வது மட்டுமே நீதி மன்றத்தின் வேலை.ஆனால்,அந்த வேலையைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் இந்த வழக்கில் நீதிமன்றம் செய்துள்ளது. அதையாவது ஒழுங்காக செய்துள்ளதா என்றால் அதுவும் இல்லை.
பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்பார்கள். இங்கே அலகாபாத் நீதிபதிகளின் பொய் இப்போது சந்தி சிரிக்கிறது.

உலகத்தின் எல்லா நாடுகளிலும் இது போன்ற இடப் பிரச்சனைகள் ஏராளம் இருக்கின்றன. உலக நீதிமன்றங்கள் அனைத்திலும் இடப் பிரச்சனைகள் தொடர்பான வழக்குகள் நடந்து வருகின்றன.அறியாமைக் காலத்திலிருந்து இன்றைய தொழில் நுட்பக்காலம் வரை,உலகின் எந்த நீதி மன்றமும் ஒரு இடப்பிரச்சனையை இப்படிக் கேவலமாகக் கையாண்டதில்லை. சட்டத்தைப் புறந்தள்ளிவிட்டு நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பளித்ததில்லை.வரலாற்று ஆதாரங்களையும்,வழக்கு ஆவணங்களையும் குப்பைக் கூடைக்குத் தள்ளிவிட்டு புராணங்களின் அடிப்படையில் தீர்வு சொன்னதில்லை.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு உலக நீதித்துறை வரலாற்றிலேயே மிகவும் விசித்திரமானதொரு தீர்ப்பு.
இந்த தீர்ப்பின் மூலம் இந்திய நீதித்துறையைப் பார்த்து உலக மக்கள் காறி உமிழும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவின் மதிப்பு மிகுந்த நீதிமன்றத்தின் மீது எளிய மக்களுக்கு இருந்த நம்பிக்கைக்கு வேட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

இனி இந்திய நீதிமன்றங்களில் நடைபெறும், இடப்பிரச்சனைகள் தொடர்பான எல்லா வழக்குகளும் இதே அளவுகோலின் அடிப்படையில் அனுகப்படுமா என்றக் கேள்விக்கு விடையில்லை.

யாருடைய இடத்திற்கும் யார் வேண்டுமானாலும் நம்பிக்கையின் அடிப்படையில் உரிமை கோரலாம் என்றும், அவ்வாறு உரிமை கோரி வழக்குப் போடுகின்ற ஒவ்வொருவருக்கும் இடம் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் சொல்லாமல் சொல்லியுள்ளது அலகாபாத் நீதிமன்றம்.

பாபர் மசூதி இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று சொல்லத்தெரிந்த மெத்தப் படித்த நீதிபதிகளுக்கு,
ராமர் எப்போது பிறந்தார் என்று சொல்லத் தெரியவில்லை .

ராமர் கோயிலை இடித்து விட்டுத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்று தீர்ப்பு எழுதத் தெரிந்த நீதிபதிக்கு,
பாபர் எப்போது கோயிலை இடித்தார் என்று சொல்லத் தெரியவில்லை.

பாபர் மசூதி இடத்தில் கோயில் இருந்ததற்கான ஆதாரம் அகழ்வாய்வின் மூலம் கிடைத்திருக்கிறது என்று அறிவிப்புச் செய்த நீதிபதியால்,
அது எந்தக் கோயில் என்பதை நிறுவ முடியவில்லை. அந்தக் கோயில் இடிக்கப்பட்ட காலமும்,பாபர் மசூதியைக் கட்டிய காலமும் ஒரே காலமா என்பதை நிரூபிக்க இயலவில்லை.

அது ராமர் கோயிலாக மட்டும் தான் இருந்திருக்க வேண்டுமா? ஏன் சமணக் கோயிலாகவோ, புத்த விகாரமாகவோ இருந்திருக்கக் கூடாதா?
என்றெல்லாம் எழும்புகின்ற எந்தக் கேள்விக்கும் விடை இல்லை.

கோயில் இருந்ததற்கான ஆதாரம் மட்டுமா கிடைத்தது, கூடவே ஆடு மாடுகளின் எலும்புகளும் கிடைத்ததே..அப்படியெனில் அங்கே கூடாரம் போட்டு மாட்டுக்கறி பக்கோடாவும், ஆட்டுக்கறி பிரியாணியும் உண்டது யார்? என்பதை நீதிபதிகள் தெளிவுபடுத்தவே இல்லை.

பாபர் மசூதி இடத்தில் அகழ்வாய்வு செய்த தொல்லியல்துறையின் அறிக்கை நம்பகத் தன்மையற்றது என்றும், பாசக மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது இந்துத்துவ சார்புள்ள ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஒருதலைப் பட்சமான ஆய்வு அது என்றும், வரலாற்று ஆசிரியர்கள் கொந்தளித்துக் கொண்டிருப்பதைப் பற்றி இந்தக் கேடு கெட்ட நீதிபதிகளுக்கு எந்தக் கவலையும் இல்லை.

இன்றைய வரலாற்று ஆசிரியர்களின் குரலைத்தான் இவர்கள் காதில் வாங்கவில்லை; ராமாயணத்தை எழுதிய துளசிதாசரையாவது கவனித்தார்களா என்றால் அதுவும் இல்லை.

ராமாயணத்தை இந்தியில் எழுதிய துளசிதாசர், தமது 'ஸ்ரீராம சரித் மானஸ்' எனும் காவியத்தில் ஒரு இடத்தில் கூட 'ராமர்கோயிலை இடித்து விட்டுத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது' என்று கூறவே இல்லை.துளசிதாசர் பாபர் ஆட்சிக்காலத்தில் அயோத்தியில் வாழ்ந்தவர் என்பதும், ராமர் மீது எல்லையற்ற அன்பு கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாபரின் ஆட்சிக்காலத்தின் போது வாழ்ந்தவரான சீக்கிய மத நிறுவனர் குருநானக், பாபரை கடுமையாக விமர்சிப்பவராக இருந்துள்ளார்.
அத்தகைய விமர்சகரான அவர் கூட எந்தவொரு இடத்திலும் 'பாபர், கோயிலை இடித்து விட்டு மசூதி கட்டியவர்' என்று குறிப்பிடவே இல்லை.

விருப்பு வெறுப்புக்கு இடமளிக்காமல், ஒளிவு மறைவின்றி, பாபரால் வெளிப்படையாக எழுதப்பட்ட 'பாபர் நாமா' என்ற அவரது சுய சரிதையில் ஒரு இடத்தில் கூட ராமர்கோயிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் தாம் மசூதி கட்டியதாக அவர் குறிப்பிடவே இல்லை.

கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டும் அளவுக்கு கீழ்த்தரமான சிந்தனையும், குரோத எண்ணமும் கொண்டவரல்ல பாபர் என்பது அவரது வரலாற்றை அறிந்தவர்களுக்குத் தெரியும்.

அயோத்தியில் உள்ள இந்துக் கோயில்களான அனுமான் கிரி,தாண்ட் தவான் குன்ட், ஜன்மஸ்தான், நாகேஸ்வர்நாத் மற்றும் சித்திகிரி மடம்
ஆகியவற்றுக்கு பாபர் தானம் வழங்கி உள்ளார். அவ்வாறு அவர் தானம் வழங்க உத்தரவிட்ட ஆவணங்களை இன்று வரை இக்கோவில்கள் நன்றியுணர்வுடன் பாதுகாத்து வைத்துள்ளன.

பாபர் தமது மகன் ஹுமாயூனுக்கு எழுதிய உயில் சமய சார்பின்மைக்கும், மத சகிப்புத் தன்மைக்கும் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. அதில் பாபர் கூறுகிறார்;

''உனது குடிமக்கள் குறித்த எல்லா வகையான தப்பான எண்ணங்களையும் உன் மனதில் இருந்து அகற்றி விடு.
நீதி தவறாத ஆட்சியை உன் மக்களுக்கு அளித்து வா.
உனது குடிமக்கள் மனதை ஈர்ப்பதற்காக மாட்டிறைச்சி உண்பதைக் கைவிடு.
இவ்வாறு நீ செய்தால் குடிமக்கள் உனக்கு நன்றி உடையவர்களாக இருப்பார்கள்.
பிற மக்களின் வணக்கத்தலங்களை ஒருபோதும் இடித்து விடாதே.
மக்கள் அரசரை நேசிக்கும் வகையிலும், அரசர் மக்களை நேசிக்கும் வகையிலும் நீதி நேர்மையுடன் ஆட்சி செய்''

பாபர் எழுதிய இந்த உயில் இன்று வரையிலும் டெல்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக இருக்கிறது.

இரவு பகலாக ஆய்வு செய்து, கடும் உழைப்புக்குப் பின் தீர்ப்பு எழுதியதாக சவடால் அடிக்கும் நீதிபதிகளின் கண்களுக்கு பாபரின் இந்த உயில் மட்டும் தென்படாமல் போனது எப்படி என்பது தெரியவில்லை.

ஆக, எந்தவித வரலாற்றுப் பார்வையும் இன்றி, வழக்கு ஆதாரங்களின் அடிப்படை இன்றி வெறுமனே நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த கேவலமானத் தீர்ப்பை காங்கிரசு கட்சி வரவேற்றுள்ளது. தமிழ் நாட்டில் விடுதலைச் சிறுத்தைகளைத் தவிர மற்ற எல்லா கட்சிகளும் இந்தத் தீர்ப்பால் திருப்தி அடைந்துள்ளன. பாசகவும் இந்துத்துவ சக்திகளும் ஆரவாரத்தால் குதூகலிக்கின்றனர்.

எல்லோராலும் ஏமாற்றப்பட்ட நிலையில், அச்சத்தின் பிடியில் சிக்கி இருக்கிறது முஸ்லிம் சமூகம்.

பாபர் மசூதி இருந்த அதே இடத்தில் மீண்டும் மசூதியைக் கட்டித் தருவோம் என்று காங்கிரசு அரசு அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப் படவில்லை.

பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் என்று லிபரான் ஆணையத்தால் அடையாளப் படுத்தப்பட்ட அத்வானி உள்ளிட்ட இந்துத்துவ பயங்கரவாதிகள் மீது இன்று வரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.

இந்த நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வகையில் மசூதி இடத்தையும் கபளீகரம் செய்து இந்துத்துவ சக்திகளிடம் ஒப்படைக்க நீதிமன்றமே முன்வந்திருப்பது இந்திய முஸ்லிம்களை அவநம்பிக்கையில் ஆழ்த்தியிருக்கிறது.

''எங்கே உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லையோ.,அங்கே தீவிரவாதம் பிறந்தே தீரும்'' என்று, திரை உலகத்தினரின் ஈழ ஆதரவுப் போராட்டத்தின் போது முழங்கினார் கமலஹாசன்.

இப்போது இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமைகளுக்கு உத்தரவாதமில்லாத நிலை உருவாகி இருக்கிறது...
இனி இங்கு எது பிறக்கும் என்பதை காலம் சொல்லும்.

அன்பும்,அமைதியும்,நல்லிணக்கமும் பிறக்க வேண்டுமெனில்
மசூதியைத் திரும்பக் கட்டும் கரசேவையை காங்கிரசு செய்யட்டும்.

[தமிழ் மண் இதழில் ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை]

பிரிட்டனில் அதிக குழந்தைகளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் 'முகம்மது'

யுனைட்டட் கிங்டம் ஆஃப் கிரேட் பிரிட்டன் (சுருக்கமாக யு.கே.) என்று அழைக்கப்பட்டும் பிரித்தானியாவில் புதிதாகப் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு அதிகமாக வைக்கப்படும் பெயர் 'முகம்மது' என்று சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக கார்டியன் நாளிதழ் கூறியுள்ளது.

இது கடந்த 14 வருடங்களாக முன்னணியில் இருந்த 'ஜாக்' (jack) என்ற பெயரை முந்தியுள்ளது. சென்ற வருடம் மூன்றாவது வரிசையில் 'முகம்மது' என்ற பெயர் இருந்தது. இந்த வருடம் அது முன்னிலைக்கு வந்துள்ளது.

இதுபோல 'ஓலிவியா' (Olivia ) என்ற பெண் குழந்தைகளுக்கான பெயர் கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் முன்னிலையில் உள்ளது.

மொத்தம் 7549 ஆண் குழந்தைகளுக்கு 'முகம்மது' என்ற பெயர் பல்வேறு வித எழுத்து வடிவில் வைக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள பிரபல நாளிதழ் டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

ஆனால் முகம்மது என்ற பெயர் ஆங்கிலத்தில் பல்வேறு தவறான எழுத்தில் (அதாவது Muhammad மற்றும் Mohammad) அமையாமல் Mohmmed என்ற சரியான ஆங்கில எழுத்தில் அமைந்து இருந்தால் இந்த கணக்கெடுப்பில் முகம்மது என்ற பெயர் இன்னும் அதிகரித்து இருக்கும் என்ற கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த கணக்கெடுப்பில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் 16 வகையான எழுத்தில் அமைந்த முகம்மது என்ற பெயர் சேர்க்கப்படவில்லை. 


முகம்மது என்பது முஹம்மத் என்ற சரியான உச்சரிப்பு கொண்ட அரபியில் அமைந்த பெயர். முகம்மது  உலக முழுவதும் வாழும் 1.66 பில்லியன் (166 கோடி) முஸ்லிம்களின் கடைசி இறை தூதர் ஆவார். அவரது பெயரை முஸ்லிம்கள் உச்சரிக்கும் போதெல்லாம் கூடவே 'ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்' என்று சேர்த்து அழைப்பார்கள் .இதன் பொருள் "அல்லாஹ் தன்னுடைய தூதரான முஹம்மது மீது கருணையும் சாந்தியும் பொழிவானாக" என்பதாகும்

Tuesday, October 26, 2010

குஜராத் கலவரம்-சுப்ரீம் கோர்ட்டில் 2வது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது எஸ்ஐடி

டெல்லி: 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தனது 2வது விசாரணை நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இசான் ஜாப்ரி கொலை வழக்கு உள்ளிட்ட 2002ல் குஜராத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது.

இந்த குழு தனது விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறது. இக்குழு கடந்த மே மாதம் தனது முதல் கட்ட விசாரணை நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

அதன் பின்னர் நேற்று தனது 2வது அறிக்கையை சமர்ப்பித்தது. எஸ்ஐடி தலைவரான ஆர்.கே.ராகவன் இந்த அறிக்கையை சமர்ப்பித்தார். மூடி சீல் வைக்கப்பட்ட உறையில் அறிக்கை வைக்கப்பட்டிருந்தது.

அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்று எஸ்ஐடி தரப்பில் விசாரித்தபோது, மூடி சீல் வைக்கப்பட்ட உறையில் வைத்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளவை பகிரங்கமாக அறிவிக்கப்படக் கூடிய தகவல்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த 2வது அறிக்கையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முன்னதாக ஜாப்ரி கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜடாபியா, எம்.கே.தான்டன் ஆகியோரின் பங்கு குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தது எஸ்ஐடி என்பது நினைவிருக்கலாம்.

2வது விசாரணை நிலவர அறிக்கை இன்று நீதிபதிகள் டி.கே.ஜெயின், பி.சதாசிவம், அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று பரிசீலனைக்கு வரவுள்ளகது.

ராகவன் தலைமையிலான விசாரணைக் கமிட்டியில், ஒய்.சி.மோடி, கே.வெங்கடேசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆதரவு தாருங்கள்


அன்பிற்குரிய சகோதரர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை பைத்துல்மால் சார்பில் நடைபெறும் ஆட்டுக் குர்பானி மற்றும் கூட்டு குர்பானித் திட்டத்திற்கு அபரிமிதமான ஆதரவை அளிக்கும் படி அன்புடன் வேண்டுகிறோம்.

கூட்டுக் குர்பானித் திட்டத்தில் 1 பங்கு ரூ.850/- மட்டும்.

ஆட்டுக் குர்பானித் திட்டத்தில் உயிருள்ள ஆடு எடை போடப்பட்டு கிலோ கணக்கில் விற்கப்படும். சரியான விலை பின்னர் அறிவிக்கப்படும், விலை நியாயமாக குறைவாக இருக்கும். எனவே ஆதரவு தாருங்கள். தங்களது பெயர்களை உடனே முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

1. 9942520199 
2. 9443448115
3. 9865096199
4. 9842468009
5. 9976610786
6. 9443617330

Email : adiraibaithulmal@yahoo.com

வஸ்ஸலாம்
தங்கள் நலம் நாடும்,

S.பர்கத், MA.,M.Phil.,M.Ed.,PGDTE., A.முனாப் BA.BL.,
தலைவர் செயலர்
அதிரை பைத்துல்மால் அதிரை பைத்துல்மால்
 

Monday, October 25, 2010

காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் பகுதியாக இருக்கவில்லை: ராய்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவுடன் இணைத்தது குறித்து கேள்வி எழுப்பி சலசலப்பை உண்டாக்கிய சமூக ஆர்வலர் அருந்ததி ராய், அந்த மாநிலம் ஒரு போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவில்லை என்று கூறியுள்ளார்.

பொது சமூகத்திற்கான கூட்டமைப்பு என்ற அமைப்பு ஏற்பாடு செய்து ஸ்ரீநகரில் நடைபெற்ற "காஷ்மீர் : சுதந்திராமா அல்லது அடிமையா?" என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு அருந்ததி ராய் பேசினார்.

காஷ்மீர் ஒரு போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவில்லை. இது ஒரு வரலாற்று உண்மை. இந்திய அரசு கூட இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளது என்று ராய் கூறினார்.

பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா விடுதலை பெற்ற உடனே, இந்தியா காலனியாதிக்க சக்தியாக மாறியதாகவும் அருந்ததி ராய் குற்றம் சாட்டினார்.


http://www.inneram.com/2010102411417/kashmir-has-never-been-an-integral-part-of-india-roy

Sunday, October 17, 2010

பாபரி பள்ளிவாசலை அதே இடத்தில் கட்டுவது மட்டும் தான் ஒரே தீர்வு!-

அயோத்தியில் பாபரி பள்ளிவாசலை தகர்க்கப்பட்ட  இடத்திலேயே மஸ்ஜித் கட்டித்தருவதைத் தவிர வேறு எந்த சமரசத் தீர்வையும் ஏற்க மாட்டோம் என்று டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் தலைமை இமாம் சையத் அஹமத் புஹாரி தெரிவித்திருக்கிறார். டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட மார்க்க அறிஞர்கள் டெல்லியில்  கூடி அலகாபாத் உயர்நீதிமன் றத் தீர்ப்பு குறித்து விரிவாக விவாதித்தனர். 

அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை முழுதாக நிராகரிப்பதாகவும் மஸ்ஜித் கட்டுவது தொடர்பாக எந்தவித சமரசத் தீர்வையும் ஏற்பதற்கு தாங்கள்  தயாராக இல்லை என்றும் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

“அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் நிராகரிக் கிறோம்; இந்தத் தீர்ப்பு தொடர் பாகத் தன்னுடைய நிலை என்ன என்பதை மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் தெளிவாக விளக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதி அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டிருக்கிறோம்.

மஸ்ஜிதிற்கு எதிரான அத்தனை நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் கட்சிதான் நேரடியான காரணம் என்று நாங்கள் கருதுகிறோம். பாபரி பள்ளிவாசல் பிரச்னை தொடங்கியது முதல் அலகாபாத் உயர் நீதிமன்றம் இப்போது அளித்துள்ள தீர்ப்புவரை அனைத் துமே காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளால் அமைந்தவை தான்” என்றும் அவர் கடுமையாக சாடினார்.

முஸ்லிம்களுக்கு உற்ற நண்பனைப் போல பேசியே ஏமாற்றிக் கொண்டு, வகுப்புவாத சக்திகளுக் குத்தான் காங்கிரஸ் துணைபோய்க் கொண்டிருக்கிறது. 

முஸ்லிம்களில் சிலர் சமரசத் தீர்வு காண்பதாகக் கூறிக்கொண்டு கொல்லைப்புற  வழியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை நாங்கள் விரும்பவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. எந்த மாதிரி யான சமரசத் தீர்வை அவர் கள் காணப் போகிறார்கள்? இடிக்கப் பட்ட இடத்திலேயே மஸ்ஜிதை அமைப்பதைத் தவிர வேறு எதையும் முஸ்லிம்களால் ஏற்க முடியாது. இந்த விஷயத்தில் முஸ்லிம் சமூகத்தை ஆதரிக்கும் எவருடைய ஆதரவையும் நாங்கள் வரவேற்கிறோம். வழக்கு தொடர் பாக உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்வோம் என்றார்.

Sunday, October 3, 2010

அயோத்தி தீர்ப்பு: ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பு: திருமாவளவன்

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் அணுகாமல் ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பு என, திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்னும் வகையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது.  அநீதியானது.  இத்தகைய தீர்ப்புகளால் நாட்டில் நல்லிணக்கமும் சகோதரத்துவமும் சீர்குலைந்து அமைதியின்மை ஏற்படவே அதிகம் வாய்ப்பிருக்கிறது.

பாபர் மசூதி இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதா இல்லையா என்பதுதான் பிரச்சனையின் அடிப்படை.  அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் பெரிய பொறுப்பிலுள்ள நீதிமன்றம், அதைச் சொத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் அனுபவப் பாத்தியதையின் அடிப்படையிலும் அணுகாமல், ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்கச் சட்டம் கூறுகிற வழிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, தீர்ப்பு வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.

450 ஆண்டுகாலமாக அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததும், அங்கே முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்ததும், 1949இல் அங்கே வலுக்கட்டாயமாக ராமர் சிலைகளை உள்ளே நிறுவி, அதைக் காரணம் காட்டி மசூதியை இழுத்து மூடியதும், 1992இல் இந்துத்துவச் சக்திகள் பாபர் மசூதியை இடித்துத் தகர்த்ததும் நம் கண்முன்னே நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள்.  ஆனால், ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் என்பதற்கான வரலாற்று ஆதாரமோ ஆவணமோ எதுவும் இல்லை என்பதும் ராமர் ஒரு புராண நாயகன்தான் என்பதும் ஒரு சாதாரண பாமரனுக்குக்கூடப் புரியும்.  இது இரண்டு நீதிபதிகளுக்குப் புரியாமல் போனது வியப்பளிக்கிறது.  மேற்படி உண்மைகளை மூன்றாவது நீதிபதி தனது தீர்ப்பில் சொல்லியும், பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்கிற அடிப்படையில் அது மூடி மறைக்கப்படுகிறது.

அயோத்தி நில வழக்கை ஆதாரங்களின் அடிப்படையில் அணுகி தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாகவே கருதவேண்டியுள்ளது.  பாபர் மசூதியை இடித்துத் தகர்த்த அத்வானி உள்ளிட்ட இந்துத்துவச் சக்திகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைச் சுதந்திரமாக உலவவிட்டுள்ள நீதிமன்றமும் சட்டமும், இப்போது மசூதியையும் கபளீகரம் செய்து இந்துத்துவச் சக்திகளிடம் ஒப்படைக்கத் துணிந்திருப்பது மிகப்பெரும் மோடியாகும். ஏற்கனவே நம்பிக்கை இழுந்து விரக்தியில் வாழும் இசுலாமிய மக்களுக்கு இது மேலும் ஆத்திரமூட்டும் செயலாகும்.

இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலில், அநீதி இழைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பக்கம் நின்று அவர்களின் உரிமையை மீட்கப் போராடுவது சனநாயகச் சக்திகளின் கடமை என விடுதலைச் சிறுத்தைகள் கருதுகின்றது.  பாபர் மசூதி இருந்த இடத்தில் திரும்பவும் மசூதியைக் கட்டித் தருவோம் என்று காங்கிரசு அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராடுவோம் என்று மதச்சார்பற்ற சனநாயகச் சக்திகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.